கனடாவில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலின் முடிவுகள் அண்மைய கருத்துக் கணிப்புக்கள் எல்லாவற்றிற்கும் மாறுபட்டதாக அமைந்துள்ளது. நடைபெற்ற பொதுத்தேர்தலில் வென்ற Mark Carney தலைமையிலான Liberal கட்சி நான்காவது முறையாக பதவியேற்கவுள்ளது. கனடாவின் 24வது பிரதமராக பதவியேற்ற ஒன்பது நாட்களின் பின்னர் Carney தேசிய அளவிலான ஒரு தேர்தலைத் தொடங்கி ஐந்து வாரங்களின் பின்னர் இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை நிலவரப்படி 168 இடங்களில் வென்று Liberal கள் முன்னிலை வகிக்கின்றனர். இதனடிப்படையில் Liberal கட்சியினர் சிறுபான்மை அரசாங்கத்தை அமைக்கவுள்ளனர். கனடாவில் பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்கவேண்டுமாயின் ஆகக்குறைந்தது 172 ஆசனங்களைக் கைப்பற்ற வேண்டும்.
புதிய ஜனநாயகக் கட்சி மற்றும் Bloc Québécois (BQ) கட்சிகளின் சரிவுகளினால் Liberal களின் வெற்றியை மேலும் இலகுவாக்கியது எனலாம். தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து NDP தலைவர் Singh கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். Singh மூன்று பொதுத்தேர்தல்களில் கட்சியை வழிநடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வருட ஆரம்பத்தில் கருத்துக் கணிப்புக்களில் Conservative கட்சி முன்னிலை வகித்திருந்தது ஆயினும் முன்னாள் பிரதமர் Justin Trudeau வின் பதவி விலகலைத்தொடர்ந்து புதிதாக பதவியேற்ற Mark Carney இன் பொருளாதார திட்டங்கள் மற்றும் அமெரிக்காவை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முன்வைத்துள்ள அவருடைய கொள்கைகள் போன்றவை பின்னாளில் Conservative களின் ஆதரவு குறைந்து Liberal கள் மேலோங்குவதற்கு காரணமாக அமைந்தது.
இதற்கிடையில் Green Party யும் இத் தேர்தலில் கணிசமான அளவு பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதன் இணைத் தலைவர்களில் ஒருவரான Elizabeth May தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டாலும் மற்றொரு இணைத் தலைவரான Jonathan Pedneault தோல்வியையே சந்தித்தார்.
