Ontario வின் வடமேற்குப் பகுதிகளில் காட்டுத்தீ தொடர்ந்து மோசமடைந்து வருவதால், உள்ளூர் முதலுதவிப் பணியாளர்களும், சேவைகளும் வெளியேற்றப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களுக்கான தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்து வருகின்றன.
முதற்கட்டமாக குழந்தைகள், முதியவர்கள், நோயாளர்கள் என சுமார் 400 பேர் வரையில் Webequie இல் இருந்து Barrie க்கு இடம்மாற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. Barrie இன் துணைத் தீயணைப்புத் தலைவர் Eric MacFadden, இந்த வார ஆரம்பத்தில் வெளியேற்றப்பட்டவர்கள் வந்துசேரத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.
Ontario வின் இயற்கை வள அமைச்சின் (MNR) பிந்திய தகவலின் படி வடமேற்கு பிராந்தியத்தில் 16 காட்டுத்தீகள் தீவிரமடைந்துள்ளன, அவற்றில் Thunder Bay மற்றும் Nipigon அருகே இரண்டு புதிய காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதைவிட, வடகிழக்கு பிராந்தியத்தில் மூன்று காட்டுத்தீகள் தீவிரமாக ஏற்பட்டுள்ளன, இவற்றில் Sudbury அருகே ஒரு புதிய தீயும் உள்ளடங்குகிறது. அவற்றில் ஒன்று MNR இன் தகவலின் படி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
காட்டுத்தீயின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வடக்கு சமூகங்கள் மற்றும் அண்டை மாகாணங்களுடன் Ontario துணை நிற்கும் என்று emergency preparedness and response அமைச்சர் Jill Dunlop தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றவும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கும் இணைந்து பணியாற்றி வருவதாகவும் இந்த நெருக்கடியான நேரத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இயற்கை வள அமைச்சின் தற்போதைய தகவலின் படி வடமேற்கு பிராந்தியத்தின் பெரும்பகுதியில் காட்டுத்தீயின் தன்மை அதிகம் முதல் தீவிரம் வரையிலும், வடகிழக்கு பிராந்தியம் முழுவதும் குறைவான தாக்கம் முதல் மிதமான தாக்கம் வரையிலும் இருப்பதாக கூறப்படுகிறது.
