Gaza வில் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும், பாலஸ்தீனியர்களின் இடப்பெயர்வை நிறுத்தவும் அழைப்பு விடுக்கும் ஒரு கூட்டு அறிக்கையில் வெளியுறவு அமைச்சர் Anita Anand உம் ஏனைய 24 நட்பு நாடுகளும் இணைந்து கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த அறிக்கையில் கையொப்பமிட்ட நாடுகளான France, Japan மற்றும் U.K உட்பட ஐரோப்பிய ஒன்றியம் அனைத்தும் Israel இன் உதவி விநியோக முறையை ஆபத்தானது என்று அழைத்தனர். அத்துடன், October 7, 2023 தாக்குதலில் போது Israel இல் இருந்து பிடித்துச் செல்லப்பட்ட பணயக்கைதிகளையும் Hamas உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அமைச்சர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
Gaza வில் பொதுமக்களின் துன்பங்கள் எல்லை தாண்டியுள்ளது. Israel அரசாங்கத்தின் உதவித்திட்டங்கள் ஆபத்தானது அது Gaza வில் உள்ள பொதுமக்களின் உரிமைகளை பெரிதும் பாதிக்கின்றது என்று கூறும் அமைச்சர்கள் அங்கு வாழும் மக்களின் அடிப்படைத் தேவைகள் மறுக்கப்படுவதையும் குழந்தைகள், பொதுமக்கள் என வேறுபாடின்றி மனிதாபிமானமற்ற முறையில் கொல்லப்படுவதையும் கண்டித்துள்ளனர்.
கிழக்கு Jerusalem இல் இருந்து மேற்குக் கரையைப் பிரிக்க முயலும் Israel அரசாங்கம், தாங்கள் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீன பிரதேசங்களில் தமது குடியேற்றங்களை விரிவுபடுத்துவதற்கான முன்மொழிவையும் கருத்திற்கொள்ளும் இந்த அறிக்கையானது பாலஸ்தீனியர்களை ஒரே நகரத்தில் குவிக்க Israel மேற்கொள்ளும் திட்டங்களையும் எதிர்க்கின்றது. அத்துடன் நிரந்தரமாக வலுக்கட்டாயமாக இடம்பெயர வைப்பது சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறும் செயல் எனவும் அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த Israel வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் Oren Marmorstein இந்த கூட்டறிக்கையை Israel நிராகரிப்பதாகவும், இது உண்மைக்குப் புறம்பானது என்றும், இது Hamas இற்கு தவறான செய்தியை அனுப்புகிறது என்றும் எச்சரித்தார்.
