காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்காக 2021 ஆம் ஆண்டு பிரதமர் Mark Carney ஆரம்பிப்பதற்கு உதவிய ஒரு உலகளாவிய வங்கிக் குழு மூடுவதற்கு வாக்களித்துள்ளது. வாக்கெடுப்பின் அடிப்படையில், கூட்டமைப்பு உடனடியாக தனது செயல்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருகிறது.
ஐ.நா. ஆதரவு பெற்ற Net-Zero வங்கி கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், உறுப்பினர் அடிப்படையிலான கட்டமைப்பை முடிவுக்குக் கொண்டு வரவும், அதற்குப் பதிலாக குழு உருவாக்கிய காலநிலை வழிகாட்டுதலை ஆதாரமாகப் பயன்படுத்தவும் உறுப்பினர்கள் வாக்களித்தனர் என்றார்.
2021 ஆம் ஆண்டு Scotland இன் Glasgow வில் நடைபெற்ற ஐ.நா. காலநிலை மாநாட்டிற்கு முன்னதாக, காலநிலை நடவடிக்கை மற்றும் நிதிக்கான ஐ.நா. சிறப்புத் தூதுவராக Carney குழுவை நிறுவுவதற்கு தனது பங்களிப்பை வழங்கியிருந்தார்.
காலநிலை முயற்சிகளில் நிதித் துறையை இணைப்பதை நோக்கமாகக் கொண்ட பரந்த Glasgow நிதிக் கூட்டமைப்பான Net-Zero வில் Carney உருவாக்கிய வங்கிக்கூட்டமைப்பு ஒரு முக்கிய தூணாக இருந்தது. அந்த நேரத்தில் Net-Zero பொருளாதாரத்திற்கு பரந்த, ஆழமான மற்றும் வேகமான மாற்றத்தை உறுதி செய்வதற்கான ஒரு மூலோபாய மன்றமாக செயல்படும் என்று Carney கூறினார்.
வங்கிகள் காலநிலை இலக்குகளை எவ்வாறு நிர்ணயிக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல் உட்பட கூட்டமைப்பால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் தொடர்ந்து இயங்கும் என்றும், காலநிலை நிதி முயற்சிகளை எவ்வாறு சிறப்பாக முன்னோக்கி எடுத்துச் செல்வது என்பது குறித்த பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றும் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.
