அரசாங்கம் செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத்திட்டத்தை தாக்கல் செய்த சில மணி நேரங்களில் Nova Scotia நாடாளுமன்ற உறுப்பினர் Chris D’Entremont, Conservative கட்சியிலிருந்து வெளியேறி Liberal கட்சியில் இணைந்துள்ளார்.
தொகுதி உறுப்பினர்கள் மற்றும் தனது குடும்பத்தினருடன் தீவிரமான பரிசீலனை மற்றும் ஆலோசனையின் பின்னரே தான் ஒரு தெளிவான முடிவிற்கு வந்ததாகவும் அதனடிப்படையிலேயே Liberal களுடன் இணைந்துள்ளதாக D’Entremon கூறினார்.
வரவுசெலவுத்திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டவுடன் Conservative தலைவர் Pierre Poilievre மற்றும் ஏனைய தொடர்புடைய நபர்களிடம் தனது இராஜினாமாவை சமர்ப்பித்ததாக அவர் கூறினார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட D’Entremon, எமது நாட்டிற்கு ஒரு சிறந்த பாதை உள்ளது, பிரதமர் Mark Carney புதிய வரவுசெலவுத்திட்டத்துடன் வலுவான சமூக உட்கட்டமைப்பை உருவாக்கவும், உறுதியான பொருளாதாரத்தை வளர்க்கவும் அந்தப்பாதையில் பயணிக்கிறார் என்று கூறினார்.
அவரது இந்த நடவடிக்கையானது Liberal கட்சிக்கு பெரும்பான்மைக்கான இடைவெளியை இரண்டாக குறைத்துள்ளதுடன், எதிர்க்கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தங்கள் வரவுசெலவுத்திட்டத்தை Liberal கள் நிறைவேற்றுவதற்கும் வழியமைக்கிறது எனலாம். இதனிடையே D’Entremont இன் கட்சிதாவும் இந்தச் செயற்பாட்டை Conservative கட்சியின் பிரதித்தலைவர் Melissa Lantsman விமர்சித்துள்ளார்.
2021 முதல் April தேர்தல் வரை D’Entremont பிரதி சபாநாயகராகப் பணியாற்றினார், அத்துடன் இந்த வசந்த காலத்தில் சபாநாயகராகும் அவரது முயற்சிக்கு Conservative இடமிருந்து ஆதரவு கிடைக்கவில்லை என தெரியவருகின்றது. இதேவேளை 16 ஆண்டுகள் Nova Scotia வில் Conservative இன் மாகாணசபை உறுப்பினராக பணியாற்றிய பின்னரே D’Entremont, 2019 நாடாளுமன்ற தேர்தல் மூலம் முதன்முதலில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
