Steven Guilbeault அமைச்சரவையில் இருந்து பதவி விலகியதை தொடர்ந்து, தங்கள் கட்சி ஒற்றுமையாக இருப்பதாக மத்தியரசின் Liberal உறுப்பினர்கள் கூறுகின்றனர். ஆனால், British Columbia வின் Liberal நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் அழுத்தத்தில் இருப்பதாக NDP நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.
கடலோர எண்ணெய்தாங்கி கப்பல்களுக்கான தடையை இரத்து செய்வதற்கான வாய்ப்பைத் திறந்து வைக்கும் Ottawa வின் Alberta வுடனான புதிய குழாய் ஒப்பந்தத்தை எதிர்த்து Guilbeault வியாழக்கிழமை அமைச்சரவையை விட்டு வெளியேறினார்.
Liberal நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் ஒற்றுமையாக இருப்பதாகக் கூறினாலும், Guilbeault பதவி விலகுவதற்கு சற்று முன்பும் அவர்கள் இதையே கூறியதாக British Columbia வின் NDP நாடாளுமன்ற உறுப்பினர்கள் Jenny Kwan கூறினார்.
முன்னாள் பிரதமர் Justin Trudeau வின் அமைச்சரவையில் சுற்றுச்சூழல் அமைச்சராக பல ஆண்டுகள் பணியாற்றிய Guilbeault, அந்த அரசாங்கத்தின் காலநிலைக் கொள்கைகளின் பிரதான நபராகவும் செயற்பட்டிருந்தார். சர்ச்சைக்குரிய நுகர்வோர் carbon வரியைப் பாதுகாத்து, carbon வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளையும் அவர் ஊக்குவித்தார்.
முன்னைய Liberal அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட பல முக்கிய சுற்றுச்சூழல் முடிவுகள் தற்போதைய பிரதமர் Carney யின் ஆட்சியின் கீழ் மாற்றியமைக்கப்பட்டதால், தனது பதவி விலகலை சமர்ப்பித்ததாக வியாழக்கிழமை ஒரு சமூக ஊடகப் பதிவில் Guilbeault கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
