அமெரிக்க ஜனாதிபதியுடன் செவ்வாயன்று தொலைபேசியில் உரையாடியதை தொடர்ந்து, Gordie Howe சர்வதேச பாலம் திறந்து வைக்கப்படுவதை தடுப்பதாக Donald Trump விடுத்த அச்சுறுத்தல் தீர்க்கப்படும் என்று பிரதமர் Mark Carney தெரிவித்துள்ளார்.
இந்தப் பாலத்தின் கட்டுமானத்திற்கான 4 பில்லியன் டாெலர் செலவை கனடா ஏற்றுக்கொண்டது என்பதையும், இதன் உரிமையானது Michigan மாநிலத்திற்கும் கனடா அரசாங்கத்திற்கும் இடையில் பகிரப்பட்டுள்ளது என்பதையும் இந்தப் பாலத்தின் கட்டுமானத்தில் கனடா மற்றும் அமெரிக்காவின் இரும்பு மற்றும் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டதையும் Trump இடம் தான் விளக்கிக் கூறியதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
திங்கட்கிழமை இரவு சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவொன்றில் Trump, பாலம் திறக்கப்படுவதற்கு அனுமதி அளிக்கும் முன் அமெரிக்காவிற்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், இந்தப் பாலமானது அமெரிக்காவின் பங்களிப்பு ஏதுமின்றி கட்டப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
அமெரிக்கா-கனடா-மெக்சிகோ வர்த்தக ஒப்பந்தம் (CUSMA) தொடர்பான பேச்சுவார்த்தைகளுடன் இணைந்து, Ottawa தொடர்ந்து கவனித்து வரும் தொடர்ச்சியான பிரச்சினைகள் குறித்தும் Trump உடனான தனது உரையாடல் அமைந்திருந்ததாக பிரதமர் Carney தெரிவித்தார்.
கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், திங்களன்று Trump, “நாங்கள் பேச்சுவார்த்தைகளை உடனடியாகத் தொடங்குவோம்” என்று கூறியிருந்தாலும், வெள்ளை மாளிகையின் அதிகாரி ஒருவர் பெயர் குறிப்பிடாமல் பேசுகையில், ஜனாதிபதி அந்தப் பாலத்தைப் பற்றிய பேச்சுவார்த்தைகளை மட்டுமே குறிப்பிட்டார் என்று தெரிவித்தார்.
இதுவிடயமாக கருத்து வெளியிட்ட Ontario மாகாண முதல்வர் Doug Ford அமெரிக்காவின் நலன்களுக்கு இந்தப் பாலம் உகந்தது என்பதால் நிச்சயமாகத் திறக்கப்படும் என்று தான் நம்புவதாக கூறியதுடன் தனது மாகாணத்தில் உள்ள மதுபானக் கடைகளில் அமெரிக்க மதுபானங்களை விற்பனை செய்யாமல் தடுக்கும் தனது முடிவில் அவர் உறுதியாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
