அமெரிக்க நாடாளுமன்றப் பிரதிநிதிகள் சபை கனடா மீதான Donald Trump இன் வரிவிதிப்புகளுக்கு எதிராக வாக்களித்ததைத் தொடர்ந்து, புதன்கிழமை மாலை அவர் கனடாவைச் சாடினார். குடியரசுக் கட்சியினரிடையே அவரது வர்த்தகக் கொள்கைகளுக்குப் போதிய ஆதரவு இல்லை என்பதைக் காட்டும் ஒரு அடையாளமான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
இது குறித்து Trump தனது சமூக வலைதளப் பக்கத்தில், “கனடா பல ஆண்டுகளாக வர்த்தகத்தில் அமெரிக்காவைச் சுரண்டி வருகிறது. அவர்களுடன் வர்த்தகம் செய்வது உலகிலேயே மிகவும் கடினமான ஒன்று, குறிப்பாக நமது வடக்கு எல்லை விவகாரத்தில். வரிவிதிப்புகள் நமக்கு எளிதான வெற்றியைத் தேடித்தரும். குடியரசுக் கட்சியினர் அதை அப்படியே தொடர வேண்டும்!” என்று பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க-கனடா எல்லையில் நிலவும் fentanyl அவசரநிலை என்பது ஒரு போலி காரணம் எனக் கூறி, ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து 6 குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் Trump இன் வரிவிதிப்புக்கு எதிராக வாக்களித்தனர். கடந்த ஆண்டு கனடா மீதான பொருளாதார ரீதியிலான வரிகளை நியாயப்படுத்த Trump இந்த அவசரநிலையைப் பயன்படுத்தியிருந்தார்.
புதன்கிழமை நடந்த வாக்கெடுப்பில் இந்தத் தீர்மானம் வெற்றி பெற்றாலும், Trump இன் ‘வீட்டோ’ அதிகாரத்தைத் தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இதற்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது, கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக இணைக்க வேண்டும் என்ற Trump இன் கருத்துகளும், அவரது முன்னுக்குப் பின் முரணான வர்த்தகக் கொள்கைகளும் அமெரிக்க வணிகங்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பது குறித்து ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர்.
Michigan செனட்டர் Elissa Slotkin போன்றவர்கள், இது மிச்சிகன் வணிகங்களுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்றும், வேலைவாய்ப்புகளைப் பாதிக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.
எவ்வாறாயினும் இந்தத் தீர்மானம் அடுத்த கட்டம் செனட் சபைக்குச் செல்லும். அங்கு குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையாக இருப்பதால், கடும் விவாதம் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை செனட்டிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், Trump தனது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதைத் தள்ளுபடி செய்ய வாய்ப்புள்ளது.
