மத்திய கிழக்கில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட கனேடியர்கள் வெளியேறுவதற்கு உதவி கோரியுள்ள நிலையில், அவர்களுக்கு உதவ கனடா பல்வேறு வழிகளை ஆராய்ந்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் Anita Anand தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தங்களை தாயகம் அழைத்துச் செல்ல அரசாங்கம் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள சில கனேடியர்கள் தொடச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தனது குடிமக்களுக்கு உதவுவதில் ஏனைய நாடுகளை விட கனடா குறைவாகவே செயற்படுகிறது என்ற விமர்சனங்களை Anand நிராகரித்தார். “கனேடியர்களுக்கு மாற்று வழிகள் இருப்பதை உறுதி செய்ய நாங்கள் பல நாட்களாக இதில் ஈடுபட்டுள்ளோம்,” என்று அவர் புதன்கிழமை மாலை Ottawa வில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
கனடா அரசாங்கத்தின் உதவியை மட்டுமே நம்பியிருக்காமல், வெளியேறுவதற்கான திட்டங்களைத் தாங்களாகவே தயார் செய்து கொள்ள வேண்டும் என்றும் வெளிவிவகார அமைச்சர் கூறியிருந்தார். எனினும், தற்போது UAE இல் இருக்கும் கனேடியர்களுக்காகச் சிறப்பு விமானங்களை ஒப்பந்தம் செய்யுமாறு தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக Anand தெரிவித்தார்.
இந்நிலையில், பிராந்தியத்தில் மோதல் விரிவடைந்து வருவதால், மத்திய கிழக்கில் உள்ள பல நாடுகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு கனேடியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
