கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc, அமெரிக்க ஜனாதிபதி Donald Trump இன் வர்த்தக அதிகாரியை இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) Washington இல் சந்திக்க உள்ளார். கண்டங்களுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தின் மீளாய்வு குறித்து Mexico உடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்த ஒரு நாளுக்குப் பின்னர் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது.
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி Jamieson Greer ஐ சந்தித்து, ‘CUSMA’ ஒப்பந்தத்தின் கட்டாய மீளாய்வு மற்றும் இருதரப்பு கவலைகள் குறித்து LeBlanc விவாதிப்பார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
Trump இன் வர்த்தக வரிகள் மற்றும் கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்த அச்சுறுத்தல்களால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு தலைகீழாக மாறியுள்ளது. புதன்கிழமை Australia வில் ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய பிரதமர் Mark Carney, அமெரிக்காவின் நடவடிக்கைகளால் குறுகிய காலத்தில் CUSMA ஒப்பந்தம் உண்மையிலேயே முறிந்துவிட்டது என்று தெரிவித்தார்.
இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை வழிநடத்துவதற்காக தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்குத் தேவையான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இந்த ஆண்டு நடைபெறவுள்ள வர்த்தக ஒப்பந்த மீளாய்வை கனடா எதிர்பார்ப்பதாக Carney தெரிவித்தார். இந்த முட்டுக்கட்டை நிலை நீடிக்கின்ற போதிலும், LeBlanc மற்றும் Greer ஆகியோர் தொலைபேசி வாயிலாகத் தொடர்ந்தும் தொடர்பில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கனடா கடந்த ஆண்டே ‘CUSMA’ தொடர்பான உள்நாட்டு ஆலோசனைகளைத் தொடங்கியிருந்தாலும், Ottawa இன்னும் அதிகாரப்பூர்வமாக அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையையும் தொடங்கவில்லை. இந்நிலையில், இருதரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதைத் தடுக்கும் வகையில் கனடாவிடம் சில தடைகள் இருப்பதாகக் கடந்த மாதம் Greer தெரிவித்திருந்தார்.
அமெரிக்கத் தலைநகரில் LeBlanc மேற்கொள்ளும் இந்தச் சந்திப்பு ‘CUSMA’ தொடர்பான பேச்சுவார்த்தை மேசைக்குக் கனடா திரும்புவதற்கான அடித்தளத்தை அமைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
