புவிசார் அரசியல் உறவுகள் சிக்கலான நிலையில் இருக்கும் இந்தச் சூழலில், கனடா ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என்று பெரும்பான்மையான கனேடியர்கள் கருதுவதாக இணையதளம் வாயிலாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது.
March மாதத்தில் Spark Advocacy நிறுவனத்தின் கருத்துக்கணிப்புப் பிரிவால் 4,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார மற்றும் அரசியல் கூட்டமைப்பில் கனடா முறைப்படி இணைவது ஒரு நல்ல யோசனை என்று நான்கில் ஒருவர் கருதுவது கண்டறியப்பட்டது.
மேலும் 58 சதவீதத்தினர் இது குறித்துத் தொடர்ந்து ஆராயப்பட வேண்டிய ஒரு முன்மொழிவு என்று குறிப்பிட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் இது ஒரு தவறான யோசனை என்று கருதுகின்றனர்.
அமெரிக்க அதிபர் Donald Trump இன் இரண்டாவது ஆட்சிக் காலத்தில், ஒரு ஆண்டிற்கும் மேலாக விதிக்கப்பட்ட சுங்க வரிகளுக்குப் பின்னர், அமெரிக்கா மீதான கனடாவின் சார்பைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறிய கனேடியர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதை இந்தக் கருத்துக்கணிப்பு உணர்த்துவதாக Spark அதிகாரி Bruce Anderson தெரிவிக்கிறார்.
கடந்த மாதம் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் கனடா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது குறித்த யோசனையை வெளிப்படையாக முன்வைத்தார். அதேவேளை, பிரதமர் Mark Carney, ஐரோப்பியக் கண்டத்துடன் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை ஆழப்படுத்த விரும்புவதாகவும், ஆனால் அந்த அமைப்பில் ஒரு முறைப்படியான உறுப்பினராக சேர விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
