Iran இல் நிலவி வரும் போர்ச் சூழலின் தாக்கம் கனடாவின் விமானப் போக்குவரத்துத் துறையிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக, தள்ளுபடி விலையிலான பயணச்சீட்டுகள் மற்றும் வெகுமதி அடிப்படையிலான முன்பதிவுகளில் பயணிகள் முதலில் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என்று துறை சார்ந்த நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இப்போது எங்களின் மிகப்பெரிய கவலை என்னவென்றால், இந்த நிலைமை மேலும் தீவிரமடைந்து மோசமானால், விமான நிறுவனங்கள் தங்களின் எரிபொருள் செலவுகளைக் குறைப்பதற்காக சேவைகளைத் குறைக்கும். இதனால், எதிர்காலத்தில் மேலும் பல விமான இரத்துகளை நாம் சந்திக்க நேரிடலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சாதாரண பயணச்சீட்டுகளில் ஏற்கனவே எரிபொருள் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சில நேரங்களில் இது பயணச்சீட்டுகளின் கட்டணத்தில் பாதி அளவு வரை கூட இருக்கலாம். எனவே, இதில் $60 முதல் $100 வரை அல்லது அதைவிட சற்று அதிகமாக விலை உயர்வு ஏற்பட்டாலும், அது கட்டணம் செலுத்தும் பொதுமக்களுக்கு மிகப் பெரிய சுமையாகத் தெரிய வாய்ப்பில்லை. என்று The Travel Group நிறுவனத்தின் முகாமைத்துவ இணைப்பாளர் McKenzie McMillan தெரிவித்தார்.
பயணங்கள் அதிகமாக இருக்கும் காலங்களில் ஏற்படக்கூடிய இடையூறுகள் குறித்தும் McMillan எச்சரித்துள்ளார். அத்தகைய காலங்களில் விமானங்கள் பெரும்பாலும் முழுமையாக நிரம்பியிருப்பதால், மாற்று ஏற்பாடுகளைச் செய்வது மிகவும் கடினமாகிவிடும். அண்மையில் Mexico வில் ஏற்பட்ட விமான இரத்துகளை அவர் முன்னுதாரணமாகக் காட்டினார். அங்கு மாற்று இருக்கைகள் கிடைக்காத காரணத்தால் பயணிகள் பல நாட்களாகத் தவித்து நின்றமையும் குறிப்பிடத்தக்கது.
