கனடா செய்திகள்

Ontario மாகாண முதல்வருக்காக கொள்வனவு செய்யப்பட்ட விமானம் பயன்படுத்தாமலே விற்பனையாகிறது.

பறக்கத் தொடங்குவதற்கு முன்னரே, Gravy Plane என்று அழைக்கப்படும் அந்த விமானத்தின் திட்டம் முடக்கப்பட்டுள்ளது. சுமார் 30 மில்லியன் டொலர் மதிப்பிலான தனிப்பட்ட ஜெட் விமானத்தை வாங்கியதை வெளிப்படுத்திய சில நாட்களிலேயே, தனது அரசாங்கம் தற்போது அந்த விமானத்தை விற்பனை செய்யவுள்ளதாக Ontario மாகாண முதல்வர் Doug Ford தெரிவித்துள்ளார்.

​செய்தி நிறுவனமொன்றிற்கு முதல்வர் அளித்த செவ்வியிலேயே பின்வருமாறு கூறியுள்ளார்.

​”சிறந்த நோக்கத்துடன் இது செய்யப்பட்டிருந்தாலும், அரசாங்க விமானத்திற்கான இந்தச் செலவிற்கு இது சரியான நேரமல்ல என்பதை நான் கேள்விப்பட்டேன், இக்கருத்துடன் நானும் உடன்படுகிறேன். Bombardier மற்றும் இதர கூட்டாளர்களுடன் இணைந்து, இந்த விமானத்தை எவ்வளவு விரைவாக விற்க முடியுமோ அவ்வளவு விரைவாக விற்பதற்கான பணிகளை மாகாண அரசு மேற்கொண்டு வருகிறது.” என்றார்.

முதல்வரின் பயணங்களுக்காக 28.9 மில்லியன் டாெலர் செலவில் பயன்படுத்தப்பட்ட Challenger 650 ஜெட் விமானம் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டிருந்ததுடன், இது Quebec மாகாணம் விமானக் கொள்வனவிற்காக செலுத்திய பணத்தை விடக் குறைவானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

எனினும், மக்களின் போராட்டங்களைப் புரிந்து கொள்ளாமல் முதல்வர் எதற்காக யதார்த்தத்திற்குப் புறம்பாக இவ்வாறு செயற்பட்டார் என Ontario மாகாண எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதுடன், மோசமான விமர்சனங்களையும் முன்வைத்திருந்தன.

“உண்மையைச் சொல்வதென்றால், விமானம் குறித்த தகவல்கள் வெளிவந்த காரணத்தினாலேயே Doug Ford இந்த ஜெட் விமானத்தை விற்பனை செய்கிறார். இந்த விமானம் குறித்த தகவல் வெளியே கசியாமல் இருந்திருந்தால், நமது பணத்தை இரகசியமாகச் செலவழிப்பதில் அவர் மகிழ்ச்சி அடைந்திருப்பார்,” என்று பசுமைக்கட்சியின் தலைவர் Mike Schreiner  ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விமானப் பயணத்தின் மீது கடும் அச்சம் கொண்டவராகவும், விமானங்களில் பறப்பதில் மிகுந்த தயக்கம் காட்டுபவராகவும் அறியப்படும் Ford, கடந்த காலங்களில் Ontario வை விளம்பரப்படுத்தும் அமெரிக்கப் பயணங்களுக்காகத் தனியார் விமானங்களையே வாடகைக்கு அமர்த்தியுள்ளார். அத்துடன், மாகாணத்திற்குள் பயணம் செய்வதற்காக பெரும்பாலும் சிறிய வகை Ontario மாகாண பொலிஸாரின் விமானங்களையே பயன்படுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரான்ஸ் அதிபர் Macron கனடாவுக்கு வருகை தந்துள்ள நிலையில் Trudeau இனை சந்திக்கவுள்ளார்

admin

வரிகளை தவிர்க்க கனடாவுக்கு வழி சொல்லும் அமெரிக்க ஜனாதிபதி Trump

canadanews

இந்த வாரம் ASEAN உச்சிமாநாடு மற்றும் உக்ரைன் பாதுகாப்பு கூட்டங்களுக்கு Trudeau செல்கின்றார்

admin