திங்கட்கிழமை வெளியிடப்பட்ட ஒரு செய்திக்குறிப்பின்படி, Canada Post நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான வரிக்கு முன்னைய இழப்பாக 1.57 பில்லியன் டொலர்களைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
முன்னைய ஆண்டில் ஏற்பட்ட இழப்புடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டில் இந்த இழப்பு 728 மில்லியன் டொலர்கள் அல்லது 86.7 சதவீதம் என்ற மாபெரும் அளவில் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ள Crown corporation இதனை தங்களின் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய வரிக்கு முன்னைய இழப்பு எனவும் குறிப்பிட்டுள்ளது.
தொழிலாளர் நிலையற்ற தன்மை வணிகத்தைப் பாதித்ததாலும், பல தசாப்தங்கள் பழமையான விதிகள் மற்றும் கட்டமைப்புகள் நிறுவனத்தின் நவீனமயமாக்கல் மற்றும் போட்டித்திறனைத் தொடர்ந்து தடுத்ததாலும், 2025 ஆம் ஆண்டில் Canada Post இன் நிதி நிலைமை கணிசமாக மோசமடைந்தது, என்று அந்தச் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
இவ்வாறாக, நிறுவனத்தின் நிதி நிலைமையின் தீவிரம் நாட்டின் நவீனத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உருமாற வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
Canada Post இன் கூற்றுப்படி, நிறுவனத்தை மீண்டும் நிதி நிலைத்தன்மைக்கு கொண்டு வருவதற்கும், இன்றைய பொருளாதாரத்தில் கனேடியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அஞ்சல் சேவையை புதுப்பிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை அது மேற்கொண்டு வருகிறது.
செலவினங்களைக் குறைப்பதற்கான ஒரு வழியாக, நாடு முழுவதும் வீடு வீடாகச் சென்று அஞ்சல் வழங்கும் சேவையை நிறுத்தப்போவதாகவும், அதன் மூலம் செயற்பாடுகளை மறுசீரமைப்பு செய்யப்போவதாகவும் கடந்த வாரம் Canada Post அறிவித்தது.
இந்த அரச நிறுவனம் 2018 ஆம் ஆண்டிலிருந்து 5 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான இழப்பைக் குவித்துள்ளது. இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டால், Canada Post ஆண்டுதோறும் சுமார் 400 மில்லியன் டொலர்கள் சேமிப்பை உருவாக்க முடியும் என்று Ottawa மதிப்பிட்டுள்ளது.
