அமெரிக்காவிற்கான கனடாவின் வர்த்தகப் பேச்சுவார்த்தைக்குழு தலைமை அதிகாரி Janice Charette செவ்வாயன்று கூறுகையில், July 1-ஆம் திகதிக்குள் கனடாவும் அமெரிக்காவும் அனைத்து சிக்கல்களையும் தீர்க்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும், ஆனால் அதற்காக வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் முறிந்துவிடும் என்று அர்த்தமல்ல என்றும் தெரிவித்தார்.
February மாதம் கனடாவின் உயர்மட்ட வர்த்தகப் பேச்சுவார்த்தையாளராகப் பொறுப்பேற்ற பின்னர் தனது முதல் பகிரங்க உரையில், “July 1-ஆம் திகதி மீது அதிக கவனம் இருப்பதாக நான் நினைக்கிறேன், இது ஒரு சோதனைச் சாவடி போன்றது, இது ஒன்றும் அதலபாதாளம் அல்ல” என்று Charette கூறினார்.
கனடா, அமெரிக்கா மற்றும் Mexico ஆகிய நாடுகள் CUSMA எனும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் அங்கத்துவ நாடுகளாக உள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் எதிர்வரும் July 1-ஆம் திகதிக்குள் மீளாய்விற்கு உட்படுத்தப்படவுள்ளது.
July 2020-இல் நடைமுறைக்கு வந்த இந்த ஒப்பந்தத்தின்படி, மூன்று நாடுகளும் ஒப்பந்தத்தை மீளாய்வு செய்து, மேலும் ஆறு ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும். தவறினால், இது ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் மீளாய்வு நிலைக்குச் சென்றுவிடும். ஒவ்வொரு ஆண்டும் மீளாய்வு செய்வது என்பது நிச்சயமற்ற தன்மையை அதிகரிக்கும் என்றும், இது முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளைப் பாதிக்கலாம் என்றும் நிறுவனங்களும் வணிகத் தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு பிச்சினைகளுக்கு முகம்கொடுத்து வரும் அமெரிக்காவால் உலகளாவிய ஒப்பந்தங்களைக் கருத்தில் கொண்டும் செயற்படவேண்டிய அதே நேரம், விடயங்களைச் சரியாகச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தினாலும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அனைத்தையும் தீர்ப்பது சாத்தியமில்லை என்று Charette மேலும் தெரிவித்தார்.
July 1-ஆம் திகதிக்குள் சிக்கல்கள் தீர்க்கப்படாவிட்டாலும், வர்த்தக ஒப்பந்தம் தொடர்ந்து அமுலில் இருக்கும் என்று அவர் கூறினார். இந்தத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள விலக்குகளால் உலகிலேயே அமெரிக்காவின் இறக்குமதி வரி விகிதம் மிகக் குறைவாக விதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக கனடா உள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படை அம்சங்களை மறுபரிசீலனை செய்வதல்ல, மாறாக அவற்றைப் பாதுகாப்பதே எனக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் என்று Charette தெரிவித்தார்.
