Iran போர்ச் சூழலுக்கு மத்தியில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் பணவீக்கம் அதிகரித்து வருவதால், கடந்த ஒரு மாதத்தில் தங்களின் தனிப்பட்ட நிதிநிலை மோசமடைந்துள்ளதாக மூன்றில் ஒரு பங்கு கனேடியர்கள் தெரிவித்துள்ளனர் என்று புதிய கருத்துக்கணிப்பு கூறுகிறது.
தங்கள் நிதிநிலை மோசமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டவர்களில், ஆண்டிற்கு $50,000 அல்லது அதற்கும் குறைவாக வருமானம் ஈட்டுபவர்கள் (40 சதவீதம்) மற்றும் Atlantic கனடாவில் வசிப்பவர்கள் (37 சதவீதம்) முதன்மையானவர்களாக உள்ளனர். கிழக்குக் கடற்கரை வாசிகளைத் தொடர்ந்து, British Columbia வில் 35 சதவீதத்தினரும், Alberta வில் 34 சதவீதத்தினரும் நிதிநிலை சரிவைச் சந்தித்துள்ளனர்.
இதற்கிடையில், கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தினர் தங்களின் அல்லது தங்கள் குடும்பத்தின் அன்றாட நிதிநிலை குறித்து கவலையடைந்துள்ளனர். மேலும் 34 சதவீதத்தினர் தங்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போராட வேண்டியிருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
வேலை இல்லாமை காரணமாகத் தங்களின் வேலை பறிபோகலாம் அல்லது தாங்கள் வேலையிலிருந்து நீக்கப்படலாம் என மொத்தம் 14 சதவீதத்தினர் நம்புகின்றனர். அத்துடன், தங்களுக்கோ அல்லது தங்கள் குடும்பத்திற்கோ தேவையான பொருட்களை வாங்கும் திறன் தங்களிடம் இருக்காது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
2022-ஆம் ஆண்டு கோடை காலத்திற்குப் பின்னர் என்றுமில்லாத அளவிற்கு, இந்த புதன்கிழமை எரிபொருள் விலை லீட்டருக்கு 10 சதங்கள் உயர்ந்து 195.9 சதங்களை எட்டும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
