அரச ஊழியர்கள் வாரத்திற்கு குறைந்தது நான்கு நாட்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்ற நடைமுறை அமுலுக்கு வர இன்னும் எட்டு வாரங்களே உள்ள நிலையில், பல மத்திய அரச துறைகள் ஊழியர்களுக்கான அலுவலக இடவசதிகள் குறித்துத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றன.
மத்திய பொதுச் சேவையில் உள்ள அனைத்து உயரதிகாரிகளும் தற்போது வாரத்தில் ஐந்து நாட்களும் அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற வேண்டும். July 6-ஆம் திகதி முதல், ஏனைய அனைத்து மத்திய அரச ஊழியர்களும் வாரத்திற்கு குறைந்தது நான்கு நாட்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று Treasury Board of Canada கூறுகிறது.
மத்திய அரச ஊழியர்களுக்கான இந்த நான்கு நாள் அலுவலகப் பணித் திட்டம் தாமதமாகும் என்று Global Affairs Canada மற்றும் Immigration, Refugees and Citizenship Canada ஆகிய அலுவலகங்கள் ஏற்கனவே அறிவித்துள்ளன. Department of National Defence குறித்துக் கூறுகையில், இந்த நான்கு நாள் அலுவலக திட்டத்தை அந்தந்த உயரதிகாரிகளே நிர்வகிப்பார்கள் என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே Employment and Social Development Canada, Environment and Climate Change Canada, Department of Justice, Fisheries and Oceans Canada மற்றும் Statistics Canada ஆகிய ஐந்து மத்திய அரச துறைகளும் தங்களுக்குப் போதுமான இடவசதி உள்ளதா என்பது தொடர்பில் இன்னும் ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளன.
இருப்பினும், சில மத்தியரசின் திணைக்களங்கள் வாரத்திற்கு நான்கு நாட்கள் ஊழியர்களை அனுமதிக்கும் வகையில் தங்களுக்குப் போதுமான இடவசதி இருப்பதாகத் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில், Indigenous Services Canada அலுவலக இடவசதியில் எவ்வித சிக்கலும் ஏற்படும் என்று தாங்கள் எதிர்பார்க்கவில்லை எனக் கூறியுள்ளது.
