இன்று வெளியிடப்பட்ட நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தூய மின்சார கட்டமைப்பின் ஒரு பகுதியாக, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களுக்கு அரசாங்கம் கூடுதலான ஆதரவை வழங்கும் என்று பிரதமர் Mark Carney தெரிவித்துள்ளார்.
2050-ஆம் ஆண்டிற்குள் மின்சாரத் திறனை இரட்டிப்பாக்குவதையும், 70 சதவீத கனேடிய குடும்பங்களுக்கான எரிசக்தி செலவைக் குறைப்பதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தக் கட்டுமானத்திற்கு ஒரு லட்சம் கோடி டாெலருக்கும் அதிகமாக செலவாகும் என்றும், அந்தச் செலவின் ஒரு பகுதியை ஈடுகட்ட பொது மக்களின் வரிப்பணம் பயன்படுத்தப்படும் என்றும் இந்த திட்டம் கூறுகிறது.
அரசாங்கம் எவ்வளவு செலவழிக்கத் தயாராக உள்ளது என்பதை இது குறிப்பிடவில்லை. இருப்பினும், வரிச் சலுகைகளை வழங்குவது மற்றும் சுமார் பத்து லட்சம் வீடுகளுக்கு எரிசக்தி சேமிப்பு மறுசீரமைப்பு திட்டங்களை மீண்டும் கொண்டு வருவது குறித்தும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்சாரக் கட்டமைப்பின் அளவை இரட்டிப்பாக்க 130,000 புதிய தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள் என்று அரசாங்கம் கணித்துள்ளது. மேலும், 2028-ஆம் ஆண்டிற்குள் 30,000 புதிய வேலைவாய்ப்புகளையும், 2050-ஆம் ஆண்டிற்குள் மேலும் 100,000 வேலைவாய்ப்புகளையும் உருவாக்குவதாக உறுதி அளித்துள்ளது.
வடக்கு பிராந்தியங்களில் மின்சாரத் திறனை உருவாக்குவதற்கு இந்த வியூகம் உறுதிபூண்டுள்ளது. ஆனால், அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து விரிவான தகவல்கள் இல்லை. அதற்குப் பதிலாக, பிராந்தியங்கள் மற்றும் பழங்குடியின பங்குதாரர்களுடன் இணைந்து Ottawa செயற்படும் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
