Markham நகரைச் சேர்ந்த 24 வயதுடைய தமிழரான Sugin Mohanathas என்ற ஆண் ஒருவர் Online மூலம் குழந்தைகளை பாலியல் ரீதியிலான தொந்தரவு கொடுக்கும் குற்றச்சாட்டின் அடிப்படையில் 2026 March 26 அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் Peel பிராந்திய பொலிஸார் தெரிவித்ததாவது, 2025 December இல் அவர்கள் ஒரு நபர் குறித்து விசாரணையைத் தொடங்கினர். அந்த நபர் பல சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்தி 16 வயதுக்குட்பட்ட இளைஞர்களை வலைவீசிப் பிடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
“குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை ஒரு வயதுக்குட்பட்ட ஆண் என போலியாக நடித்து, அந்தரங்கப் படங்களைப் பெற்றதாகவும், பின்னர் அவற்றை பயன்படுத்தி அந்த இளைஞர்களை பாலியல் நோக்கங்களுக்காக மிரட்டியதாகவும்,” பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் பாதிக்கப்பட்டவர்களுடன் Online உரையாடல்களில் “Keshawn” என்ற புனை பெயரை பயன்படுத்தியுள்ளார். அத்துடன், Snapchat செயலியில் nicovalentino23 என்ற பெயரிலும், Instagram செயலியில் Forgiveme1236 என்ற பெயரிலும் போலிக்கணக்குகளை பயன்படுத்தியுள்ளார்.
சந்தேகநபர் மீது 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை Online இல் வலைவீசிப் பிடித்தல், 16 வயதுக்குட்பட்டோருக்கு வெளிப்படையான பாலியல் உள்ளடக்கத்தை வழங்குதல், மிரட்டிப் பணம் பறித்தல், மற்றும் குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குறித்த நபரால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு எவரும் இருந்தால், அல்லது இருக்கலாம் என்று நினைப்பவர்கள் பொலிஸாருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
