Ontario பொதுத்துறை ஊழியர் சங்கத்தைச் (OPSEU) சேர்ந்த சுமார் 4,000 ஊழியர்கள் கடந்த May 25 முதல் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மாகாணம் முழுவதும் உள்ள சுமார் 22 சமூக சேவை அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் இதில் அடங்குவர்.
இவர்கள் Ontario Public Service Employees Union (OPSEU) தொழிற்சங்கத்தால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றனர். தங்களது சேவைகளுக்காக மாகாண அரசிடமிருந்து அதிக நிதியுதவி வழங்கப்பட வேண்டும் என்றும், மசோதா 124 சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தப்பட்டிருந்த முன்னைய கால சம்பள உயர்வுகளுக்கான நிலுவைத் தொகைகளைப் பெற வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர்.
அரசாங்க ஊழியர்களின் சம்பள உயர்வை ஆண்டுக்கு ஒரு சதவீதமாக மட்டுப்படுத்திய இந்தச் சட்டம், பின்னர் நீதிமன்றத்தால் அரசியலமைப்புக்கு முரணானது எனக் கூறப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது.
வேலைநிறுத்தம் எப்போது முடியும் என்பது பற்றிய எந்தத் தெளிவும் இல்லாத நிலையில், கனேடியக்குடும்பங்கள் பல இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். உணவு, சுகாதாரம், கல்வி போன்றவற்றை பெற்றுக்கொள்வதிலும் சிலர் சவாலை எதிர்நோக்குகின்றனர்.
இந்த பணியாளர்கள் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் வீடற்ற ஏழை எளிய மக்களுக்குத் தேவையான மிக முக்கியமான சேவைகளை வழங்கி வந்தவர்களாவர். போராட்டம் நான்காவது வாரமாக நீடிப்பதால் Ontario குடும்பங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், வரும் மாதங்களில் மேலும் பல சமூக சேவைப் பிரிவு பணியாளர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் இணைவார்கள் என்றும், இதனால் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்றும் தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.
