Ontario கல்வி அமைச்சர் Paul Calandra, புதிய வரவுப்பதிவேடு விதிகள் தொடங்கவிருக்கும் அடுத்த கல்வியாண்டில், விளையாட்டுப் போட்டிகளுக்காகப் பெற்றோர் தங்களது பிள்ளைகளை பாடசாலையிலிருந்து அழைத்துச் செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.
வரவிருக்கும் கல்வியாண்டு முதல், மாணவர்களுக்கு அவர்களின் தரத்தின் அடிப்படையில், வரவுப்பதிவு மற்றும் பங்கேற்பு ஆகியவற்றிற்கு இறுதிப் புள்ளியில் 10 அல்லது 15 சதவீதம் வழங்கப்படவுள்ளது.
9 மற்றும் 10 ஆம் தரங்களில், வரவுப்பதிவு மற்றும் பங்கேற்பிற்கு இறுதி மதிப்பெண்ணில் 15 சதவீதமும், 11 மற்றும் 12 ஆம் தரங்களில் 10 சதவீதமும் வழங்கப்படும்.
மாணவர் ஒருவர் முறையான காரணமின்றி இரண்டு தடவைக்கு மேல் பாடசாலைக்கு சமுகமளிக்காது இருந்தால், அவர்களால் அந்த முழு 15 அல்லது 10 சதவீத மதிப்பெண்ணைப் பெற்றுக்கொள்ள முடியாது. பொதுவாக உடல்நலக்குறைவு மற்றும் மத வழிபாட்டுப் பண்டிகை நாட்கள் ஆகியவை முறையான காரணங்களாகக் கருதப்படும்.
Ontario வின் உயர்தரப் பாடசாலைகளில் மாணவர்களின் வருகைப்பதிவு விகிதம் நாட்டின் மிக மோசமான நிலைகளில் ஒன்றாக உள்ளது என்றும், இதற்கு ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சர் கூறுகிறார்.
”பயிற்சியில் இருக்கும் உயர் மட்ட விளையாட்டு வீரர்களுக்கு, நிச்சயமாக நாங்கள் சில சலுகைகளை வழங்குவோம். ஆனால் விளையாட்டு அமைப்புகளுக்கும் நான் இதையே மீண்டும் கூறுகிறேன். கல்விதான் மிக முக்கிய முன்னுரிமை,” என்று அவர் மேலும் கூறினார்.
