Peel பிராந்திய பொலிஸார் (PRP) கூறுகையில், கூட்ட நெரிசல் காரணமாக பொருட்காட்சித் திடலில் இருந்து வெளியேறும் மக்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் எழுந்ததையடுத்து, Brampton இல் நடைபெற்ற Jambana One World திருவிழாவை திங்கட்கிழமை மாலை அதிகாரிகள் நிறுத்தியதாகத் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை இரவு இந்தத் தகவலைப் பதிவிட்ட பொலிஸார், Brampton பொருட்காட்சித் திடலில் இருந்து அதிகளவில் மக்கள் வெளியேறத் தொடங்கியபோது, விழா ஏற்பாட்டாளர்களுடன் இணைந்து அதிகாரிகள் நெருக்கமாகப் பணியாற்றியதாகக் குறிப்பிட்டனர். “கூட்ட நெரிசல் காரணங்களினாலும், மக்கள் வெளியேறும்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், பொதுமக்கள் அப்பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,” என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்தையும் கூட்ட நெரிசலையும் ஒழுங்குபடுத்துவதற்காக அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே தரித்திருந்தனர். Jambana திருவிழா, பெரும்பாலும் ‘Jambana One World திருவிழா’ என அழைக்கப்படும். இது, கரீபியன் கலாச்சாரம், இசை, உணவு மற்றும் சமூகத்தைக் கொண்டாடும் வகையில் Brampton இல் நடைபெறும் ஒரு முக்கியமான கோடைக்கால நிகழ்வாகும்.
எனினும், கூட்டத்தைக் கலைக்கும்போது எவ்வித பெரிய பாதுகாப்புச் சிக்கல்களும் பதிவாகவில்லை என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்தத் திருவிழா நிறுத்திவைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
