அமெரிக்கா மற்றும் கனடா இடையே வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், “Lake Ontario” வின் பெயரை “Lake America” என மாற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் Donald Trump தெரிவித்துள்ளார்.
“நாங்கள் இனி Ontario வுடன் அதிகளவில் வணிகம் செய்யப்போவதில்லை என்பதால், “Lake Ontario” வின் பெயரை “Lake America” என மாற்றுவது குறித்து அமெரிக்கா தீவிரமாக பரிசீலித்து வருகிறது,” என்று ‘Truth Social’ தளத்தின் பதிவொன்று தெரிவிக்கின்றது.
இத்தகைய பெயர் மாற்றம், கடந்த ஆண்டு மெக்சிகோ வளைகுடாவை (Gulf of Mexico) “அமெரிக்க வளைகுடா” (Gulf of America) என்று பெயர் மாற்றம் செய்வதற்கு அப்போதைய குடியரசுக் கட்சி அதிபர் பிறப்பித்த தன்னிச்சையான நிர்வாக உத்தரவை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.
கடைசி நேர வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் போது, பிரெஞ்சு மொழியையும் கலாச்சாரத்தையும் பலவீனப்படுத்த Trump திட்டமிட்டிருந்தார் என்ற Carney யின் குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்டு Trump தனது அடுத்தடுத்த பதிவொன்றைப் பகிர்ந்துள்ளார்.
“நான் கனேடியர்கள் பிரெஞ்சு மொழி பேசுவதில் ஒருபோதும் தலையிட மாட்டேன்! உண்மையில், அவ்வளவு முட்டாள்தனமான ஒரு காரியத்தைச் செய்வதை பற்றி நான் சிந்தித்தது கூட இல்லை,” என்று Trump பின் ‘Truth Social’ பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. “Quebec” மக்களிடம் இருந்து முற்றிலுமாக இழந்துவிட்ட அரசியல் ஆதரவைப் பெறுவதற்காக, ஒரு பலவீனமான மற்றும் பயனற்ற பிரதமரால் இந்த பொய் உருவாக்கப்பட்டது. நான் பிரெஞ்சு கனேடியர்களை நேசிக்கிறேன்! அதிபர் DONALD J. TRUMP.” என அந்தப்பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
முறிந்த வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மற்றும் Trump – Ontario முதலமைச்சர் Doug Ford இடையேயான காரசாரமான வாக்குவாதங்களுக்கு மத்தியில், கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில் இந்தப் புதிய பதிவுகள் வெளியாகியுள்ளன.
கனடாவின் இறையாண்மை மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதுடன், ஏனைய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்வதற்கான கனடாவின் திறனைக் கட்டுப்படுத்தும் வகையிலான இறுதி நேரக் கோரிக்கைகளை அமெரிக்கா கொண்டு வர முயன்றதாகக் கூறி, கனேடியப் பிரதமர் Mark Carney வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
