கனடா நாட்டில் தற்காலிகமாகத் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கையை மேலும் குறைக்க வேண்டும் என்றும், அவர்கள் நாட்டை விட்டு வெளியேறும்போது அது குறித்த சிறந்த கண்காணிப்புத் தரவுகளைப் பெற வேண்டும் என்றும் குடிவரவு தொடர்பான நிபுணர் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இக்குழுவில் முன்னாள் குடிவரவு அமைச்சர் Jason Kenney, இத்துறையின் சிறந்த கல்வியாளர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். அரசாங்கத்தின் வருடாந்த குடிவரவு நிலைகள் குறித்த கலந்துரையாடலுக்காக இக்குழுவினர் ஓர் அறிக்கையைத் தயாரித்து வருகின்றனர்.
கனடாவில் குடிவரவு கடுமையாக அதிகரித்ததன் காரணமாக வீட்டுவசதி பற்றாக்குறை மற்றும் சமூக சேவைகளில் கூடுதல் சுமை போன்ற குறிப்பிடத்தக்க பிரச்சினைகள் எழுந்தன. இதனையடுத்து, வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட தற்காலிகமாகத் தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை கனடா ஆரம்பித்து இரு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
ஆனால் தற்காலிகமாகத் தங்கியிருப்பவர்கள் கனடாவுக்கு வந்து சேர்ந்த பின்னர் அவர்களைக் கண்காணிப்பதில் கனடா தெளிவற்ற நிலையில் உள்ளது என்று immigration targets council இன் தலைவர் Parisa Mahboubi தெரிவித்துள்ளார்.
2027-ஆம் ஆண்டின் இறுதிக்குள் தற்காலிகமாகத் தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கையை மொத்த மக்கள் தொகையில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவாக பேண வேண்டும் என்பதே அரசாங்கத்தின் தற்போதைய இலக்காகும். October 2024-இல் உச்சத்தில் இருந்தபோது, தற்காலிகமாகத் தங்கியிருப்பவர்களின் தொகை ஏழு சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. அதேவேளை இது கடந்த வசந்த கால நிலவரப்படி மொத்த மக்கள் தொகையில் சுமார் 6.2 சதவீதமாக குறைந்தது.
கனடாவின் குடிவரவு அமைப்பின் மீதான கட்டுப்பாட்டை மீட்டெடுப்பதில் ஐந்து சதவீதம் என்பது உச்ச வரம்பாகக் கருதப்பட வேண்டுமே தவிர, குறைந்தபட்ச வரம்பாக இருக்கக்கூடாது என்று Mahboubi கூறினார். வரலாற்று சராசரிகளுக்கு ஏற்ப, நிரந்தரமற்ற குடியிருப்பாளர்கள் மொத்த மக்கள் தொகையில் மூன்று முதல் நான்கு சதவீதமாக பேணக்கூடிய வகையில் கனடா இலக்கு வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
