Google maps தனது அமைவிடத்தை அமெரிக்காவில் கொண்டுள்ள பயனர்களுக்கு, அமெரிக்க அதிபர் Donald Trump இந்த வாரம் Great Lake இன் பெயரை மாற்றுவதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, “Lake America” எனப் புதுப்பித்துக் காட்டுகிறது.
கனடாவில் உள்ள பயனர்கள் Google maps இல் இன்னமும் அதை “Lake Ontario” என்றே காண்பார்கள். இருப்பினும், பயனர்கள் தங்களது தேடலில் “Lake America” எனப் பதிவிட்டால், தேடலின் முடிவாகக் கொண்டுவந்து காட்டும்.
இருப்பினும், Hydro One, LCBO மற்றும் GO Transit உள்ளிட்ட பல கனேடிய வலைத்தளங்களும் செயலிகளும் தங்களது வரைபடப் படங்களில் “Lake America” என்றே காட்டுகின்றன. இவை அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மூன்றாம் தரப்பு வரைபடக் கருவிகளைப் பயன்படுத்துவதே இதற்குக் காரணமாக இருக்கக்கூடும்.
“எங்களது மின்வெட்டு வரைபடத்தில் “Lake Ontario” தவறாகக் குறிப்பிடப்பட்டிருப்பதை நாங்கள் அறிவோம்,” என Hydro One நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட இணையப் பதிவொன்றில் தெரிவித்துள்ளது. “இந்தப் பிரச்சனை மூன்றாம் தரப்பு வரைபடச் சேவையால் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையைச் சரிசெய்து, சரியான புவியியல் பெயரைக் கொண்டுவர எங்களது சேவை வழங்குநருடன் இணைந்து விரைவாகச் செயற்பட்டு வருகிறோம். இந்தத் தவறுக்கு வருந்துவதுடன், இதனால் ஏற்பட்ட குழப்பங்களுக்கும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்.” என்று அந்த நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க அரசாங்கத்தின் புவியியல் பெயர்கள் தரவுத்தளம் இந்த ஏரியின் பெயரை முறைப்படி மாற்றியுள்ளதால் இந்த மாற்றத்தை மேற்கொண்டதாகவும், கனடா மற்றும் அமெரிக்காவிற்கு வெளியே உள்ள பயனர்கள் இரண்டு பெயர்களையும் காணக்கூடியதாக இருக்கும் என்றும் இந்த நிறுவனம் தனது வலைத்தளத்தில் August 29 அன்று வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை ABC இன் “This Week” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய Ontario மாகாண முதல்வர் Doug Ford, வியாழக்கிழமை Trump நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்ட போதிலும், இந்தப் பெயர் மாற்றம் நிலைக்காது என்று கூறினார்.
பிரதமர் Mark Carney வியாழக்கிழமை வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவொன்றில், ஏரியின் பெயரை மாற்றுவதற்கான Trump இன் முயற்சிக்கு பதிலளித்தார். இதன்போது அவர் “Lake Ontario” எப்போதும் அதன் அசல் பெயராலேயே அறியப்படும் என்பதை கனேடியர்கள் அறிவார்கள் என்றும், அது “அன்றும், இன்றும், என்றும்” அப்படியே இருக்கும் என்றும் தெரிவித்தார்.
ஐந்து பெரிய ஏரிகளில் ஒன்றான “Lake Ontario”, Ontario மற்றும் New York இடையே அமைந்துள்ளது. கனடாவின் Ontario மாகாணத்திற்கு இந்த ஏரியின் பெயரே சூட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
