அமெரிக்காவும் கனடாவும் ஒருவருக்கு ஒருவர் நன்மையளிக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை எட்ட முடியும் என பிரதமர் Mark Carney இன்னமும் நம்புகிறார், ஆனால் அதற்கு முதலில், அதிபர் Donald Trump உம் அவரது நிர்வாகமும் கனேடியர்களுக்குத் தகுந்த மரியாதை அளிப்பதோடு, பேச்சுவார்த்தைகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததிலிருந்து, அதிபர் Trump கூடுதல் வரியை விதித்ததோடு மட்டுமல்லாமல், வர்த்தக விவகாரத்தில் கனடா நீண்டகாலமாக அமெரிக்காவைப் பயன்படுத்திக் கொள்கிறது என்று கருதி, அந்நாட்டிற்கு எதிராகத் தனது வழக்கமான சமூக ஊடக விமர்சனங்களையும் தொடுத்து வருகிறார்.
British Columbia வில் உள்ள Vernon, Cadet பயிற்சி நிலையத்தில் பெண் உறுப்பினர்களைக் கேலி செய்து, அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் Pete Hegseth பதிவிட்ட ஒரு அருவருப்பான சமூக ஊடகப் பதிவு இந்தப் பகைமையை மேலும் அதிகரித்தது.
செவ்வாய்க்கிழமையன்று, கருத்து வெளியிட்ட பிரதமர், அந்தப் பதிவு “அவர்களது பதவிக்கு அழகல்ல என்றும், கனடாவையோ அல்லது நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் வர்த்தகச் சூழலையோ அமெரிக்கா தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது” என்றும் தெரிவித்தார்.
அதேவேளை நியாயமாகப் பார்த்தால், எல்லை தாண்டிய இப்பிரச்சினையின் போது அனைத்துக் கனேடிய அரசியல்வாதிகளும் முதிர்ச்சியான அணுகுமுறையைக் கைக்கொண்டனர் என்று கூறிவிட முடியாது என்றும் Carney கூறினார்.
“இந்தப் பேச்சுவார்த்தைகளிலும், அதன் பின்னரும் அமெரிக்காவின் அணுகுமுறை எப்படி இருந்ததென்றால், கனடாவின் முக்கிய தொழிற்துறைகள் அமெரிக்கத் தொழிற்துறைகளின் துணை நிறுவனங்களாகச் செயற்பட வேண்டும் அல்லது கனடாவில் உள்ள அத்தொழிற்துறைகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு முற்றிலும் அழிக்கப்படும் வகையிலான நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என்பதாகவே இருந்தது. நிச்சயமாக நாங்கள் அந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.
