அமெரிக்காவின் அண்மைய வரிவிதிப்புகள் மற்றும் இறக்குமதித் தடைகளுக்கு எதிராக கனடாவால் விதிக்கப்பட்டுள்ள பழிவாங்கும் வரிகளில் மாற்றங்களைச் செய்வது குறித்து மத்திய அரசாங்கம் இன்னும் ஆராய்ந்து வருவதாக பிரதமர் Mark Carney தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர், இந்த நடவடிக்கைகள் சில துறைகள் குறிப்பிடத்தக்கவை என்றாலும், அநேகமானவை அமெரிக்காவின் முன்னைய நடவடிக்கைகளுடன் ஒப்பிடும்போது இவை ஒப்பிட்டளவில் மிதமானவை என்று கூறினார்.
இந்த வர்த்தகப் பகைமைக்கு இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர், மேலும் அமெரிக்கா கடைசி நிமிடத்தில் தேவையற்ற கோரிக்கைகளைத் திணிக்க முயல்வதாகக் கனடா குற்றம் சாட்டியுள்ளது.
அதேவேளை, வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் கனடாவின் “சிவப்புக் கோடுகள்” மாற்றமின்றி அப்படியே உள்ளதாகக் Carney வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். ஏனைய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளும் இறையாண்மை உரிமையைத் தக்கவைத்துக் கொள்வதும், கனேடிய கலாச்சாரம் மற்றும் பிரெஞ்சு மொழியைப் பாதுகாப்பதும் இதில் அடங்கும் என்றும் பிரதமர் மேலும் கூறினார்.
செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், அண்மைய நாட்களில் Trump உடன் இரண்டு முறை பேசியதாக வியாழக்கிழமை தெரிவித்துடன், “கனடா எப்போதும் ஒரு நியாயமான ஒப்பந்தத்தை எட்டத் தயாராக உள்ளது,” என்றும் தெரிவித்தார். “கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மையளிக்கும் ஒரு ஒப்பந்தம் சாத்தியம் என்றும், அதற்காக எனது குழுவும் நானும் தயாராக இருக்கிறோம் என்றும் நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
இதனிடையே, வரிகள் மற்றும் தடைகளால் பாதிக்கப்பட்ட வர்த்தகங்கள் மாகாணத்தின் உதவித் திட்டங்களைப் பெற்றுக்கொள்வதற்கு தகுதியுடையவை என்று Ontario முதல்வர் Doug Ford வியாழக்கிழமை தெரிவித்தார்.
Toronto Region Board of Trade இல் உரையாற்றிய Ford, பாதிக்கப்பட்ட தொழிற்துறைகள் தொடர்ந்து இயங்குவதற்காக Ontario தனது வரி ஆதரவுத் திட்டங்களுக்கான தகுதியை அந்தத் துறைகளுக்கும் விரிவுபடுத்தும் என்று கூறினார்.
