அமெரிக்க வர்த்தகக் கட்டுப்பாடுகளால் கனடாவின் வைன் தொழிற்துறை கடுமையான அழுத்தத்தைச் சந்தித்து வரும் நிலையில், இந்தச் சிக்கலான சூழல் Ontario மற்றும் கனடாவில் தயாரிக்கப்படும் வைன்களுக்கான உள்நாட்டுச் சந்தையை விரிவுபடுத்துவதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கக்கூடும் என்று தொழிற்துறைத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
“அமெரிக்க அரசு என்ன செய்கிறது என்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் நமது சொந்தத் தேர்வுகளையும், கனடாவில் இந்தத் துறையை நாம் எவ்வாறு வளர்க்கிறோம் என்பதையும் நம்மால் கட்டுப்படுத்த முடியும்” என்று Wine Growers Canada அமைப்பின் தலைவரும் நிறைவேற்று அதிகாரியுமான Dan Paszkowski தெரிவித்துள்ளார்.
Wine Growers Canada என்பது கனேடிய வைன் தொழிற்சாலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துடன் மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களுக்கு இடையிலான தொழிற்துறைத் தொடர்பாளராகச் செயல்படும் ஒரு இலாபநோக்கற்ற வர்த்தக அமைப்பாகும். இது நாடு முழுவதும் உள்ள 90 சதவீதமான திராட்சைத் தோட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
Paszkowski யின் கூற்றுப்படி, அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் கனேடிய வைன்களில் மொத்தம் 90 சதவீதம் Ontario விலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், அண்மைய கட்டுப்பாடுகளால் இந்த மாகாணத்தின் வைன் தொழிற்சாலைகள் அதிகளவில் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
March 2025-இல் அமெரிக்கா, மதுபானங்கள் உட்பட பல்வேறு கனேடிய பொருட்கள் மீது வரிகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து வர்த்தகப் பிரச்சினை தீவிரமடைந்தது. இதற்குப் பதிலடியாக, Ontario மற்றும் ஏனைய மாகாணங்கள் அமெரிக்க மதுபானங்களை கடைகளில் இருந்து அகற்றின.
September 8 அன்று, September 29 முதல் மதுபானங்கள் உட்பட பல கனேடிய பொருட்களின் இறக்குமதியை நடைமுறையில் தடை செய்யும் நிர்வாக உத்தரவுகளில் Trump கையெழுத்திட்டார்.
”வரி விதிப்பு அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து August மாதத்தில் அமுல்படுத்தப்பட்ட 50 சதவீத வரி விதிப்பு ஆகியவை அமெரிக்காவில் வைன் விற்பனை செய்வதற்கான வாய்ப்பிற்கு ஒரு பெரிய அடியாக அமைந்தது,” என்று Paszkowski கூறினார்.
