பொலிஸாரின் தகவலின்படி, கடந்த வாரம் Ontario வின் Sault Ste. Marie இல் சிறைபிடித்து வைக்கப்பட்டிருந்த 15 வயது சிறுவன், கடத்தல்காரர்கள் தவறான பாதையில் சென்றதனால் காப்பாற்றப்பட்டுள்ளான்.
சந்தேகத்திற்குரிய அக்கடத்தல்காரர்கள் ஒரு ஹோட்டலை நோக்கிச் சென்றபோது தவறான பாதையில் திரும்பி, அமெரிக்காவை இணைக்கும் சர்வதேச பாலத்திற்குள் சென்றுவிட்டனர். அங்கு கனடா எல்லைப் பாதுகாப்பு முகாமை (CBSA) அதிகாரிகளால் இரு ஆண்களும் கைது செய்யப்பட்டு, அச்சிறுவன் மீட்கப்பட்டான்.
இந்தச் சம்பவம் September 19 அன்று நடைபெற்றது. இச்சம்பவத்துடன் Sault Ste. Marie ஐ சேர்ந்த 40 வயதான Sahan Alam மற்றும் Ontario வின் Sudbury ஐ சேர்ந்த 29 வயதான Hasan Al-Mamun ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இருவர் மீதும் கடத்தல் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகச் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டுகள் எதுவும் நீதிமன்றத்தில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
”இரவு 10:15 மணிக்கு மேல், வாகனத்திற்குள் 15 வயது சிறுவன் இருப்பதை CBSA அதிகாரிகள் கவனித்தபோது, கடத்தல் சந்தேகத்தின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அவர்களால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக 911 அவசர அழைப்பு மையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது” என்று பொலிஸார் கூறியுள்ளனர்.
அதிகாரிகள் Sault Ste. Marie இல் உள்ள CBSA இன் நுழைவு வாயிலுக்கு அனுப்பப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் பாதிக்கப்பட்ட சிறுவனைப் பற்றி அதிகமாகத் தெரியாது என்றும், அன்றைய தினத்தின் தொடக்கத்தில்தான் அவர்கள் அச்சிறுவனைத் தங்களுடன் அழைத்துச் சென்றுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்ததுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுவனை சந்தேக நபர்கள் ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது, சர்வதேச பாலத்திற்குச் செல்லும் பாதையில் தவறாகத் திரும்பிவிட்டனர். பின்னர் அவர்கள் மீண்டும் கனடாவிற்குள் நுழைய முயன்றபோது அதிகாரிகளால் வழிமறிக்கப்பட்டனர்.
