அமெரிக்காவுடனான வர்த்தகத் தகராறுகளுக்கு மத்தியில், கனடா ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த முனையும் நிலையில், சில சிறு தொழில்களும் புதிய சந்தைகளுக்காக வெளிநாடுகளை நோக்கி கவனத்தைத் திருப்புகின்றன.
Ottawa வில் உள்ள SFR Distillery அமெரிக்க சந்தையில் தனது வணிகத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டிருந்தது. ஆனால், கனடாவின் சில பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கும் வகையில் Washington எடுத்த புதிய நடவடிக்கைகளால் அந்த உத்தி முடங்கியுள்ளது.
அண்மைக்காலம் வரை, அமெரிக்காவில் வர்த்தகத்தை விரிவுபடுத்துவது இந்த மதுபான உற்பத்தி ஆலையின் வளர்ச்சி உத்தியின் ஒரு பகுதியாக இருந்தது.
Ontario கடைகளில் இருந்து bourbon மதுபானங்கள் அகற்றப்பட்டபோது, அதற்கு மாற்றாகவே இதன் முதன்மையான விஸ்கி தயாரிக்கப்பட்டு LCBO கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டது.
அண்மைய உள்நாட்டு வளர்ச்சியைத் தொடர்ந்து, இந்நிறுவனம் அமெரிக்க சந்தையில் பெரியளவில் களமிறங்க திட்டமிட்டிருந்தது. ஆனால் இப்போது, அதற்குப் பதிலாக ஐரோப்பாவை நோக்கித் தன் கவனத்தைச் செலுத்துகின்றது SFR Distillery நிறுவனம்.
இந்த ஆண்டு முழுவதிலும் நடைபெறவுள்ள பல பெரிய ஐரோப்பிய வர்த்தகக் கண்காட்சிகளில் பங்கேற்க இந்த மதுபான உற்பத்தித் தொழிற்சாலை திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அங்கு விநியோகஸ்தர்களையும் இறக்குமதியாளர்களையும் சந்திக்க முடியும் என நிறுவனத்தின் பொது முகாமையாளரான Adam Brierley நம்புகிறார்.
