கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே பயணம் செய்வோருக்கான எல்லைப் பரிசோதனை முறைகளை விரைவுபடுத்துவதுடன், சில குறிப்பிட்ட சோதனைச் சாவடிகளில் முன்னுரிமைப் பாதைகளைப் பயன்படுத்துவதற்கான அனுமதியையும் வழங்கும் கனடாவின் ‘Nexus’ பயண அட்டைகளுக்கு விண்ணப்பிக்கும் கனேடியர்களுக்கான புதிய காலக்கெடுவை Canada Border Services Agency (CBSA) அறிவித்துள்ளது.
அதன்படி, April 1, 2027 முதல், விண்ணப்பதாரர்கள் தற்காலிக ஒப்புதல் (conditional approval) பெற்ற இரண்டு ஆண்டுகளுக்குள் தங்களது உள்நுழைவு நேர்காணலைத் (enrolment interviews) திட்டமிட வேண்டும் என்று CBSA வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
COVID-19 பெருந்தொற்றினால் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக, CBSA தற்காலிகமாக நீடித்திருந்த ஐந்து ஆண்டு காலக்கெடுவில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம் இதுவாகும்.
தற்போது உள்நுழைவு நேர்காணலுக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், பழைய இரண்டு ஆண்டு காலக்கெடு நடைமுறைக்கு மீண்டும் அமுலாகிறது” என்று CBSA தெரிவித்துள்ளது.
CBSA தகவலின்படி, April 1, 2027-க்கு முன்னர் தற்காலிக அனுமதி பெற்ற விண்ணப்பதாரர்கள், தங்களின் அனுமதித் திகதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் அல்லது April 1, 2029-க்குள் (எது முதலில் வருகிறதோ அதற்கேற்ப) தங்களது நேர்காணலைத் திட்டமிட வேண்டும்.
நேர்காணலுக்காக காத்திருப்போர், விண்ணப்பத்தின் காலாவதித் திகதியைத் தவிர்த்துக் கொள்வதற்கு உடனடியாக உங்கள் நேர்காணல் நேரத்தை முன் பதிவு செய்ய வேண்டுமென்று CBSA கூறியுள்ளது.
விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பின்னர், Nexus பயண அட்டையை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் CBSA மற்றும் அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு முகாமை (CBP) ஆகிய இரண்டிலும் தங்கள் நேர்காணலுக்கான நேரத்தைத் திட்டமிட வேண்டும். அத்துடன், பயணிகளுக்கு அமெரிக்காவில் TSA PreCheck மற்றும் Global Entry ஆகிய சிறப்புப் பயணச் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
Nexus இன் ஐந்து ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் உறுப்புரிமை விண்ணப்பக் கட்டணமாக 120 அமெரிக்க டாெலர்கள் செலுத்த வேண்டும். குழுவாகப் பயணம் செய்பவர்களில் ஒவ்வொரு நபருக்கும் தனித்தனி அட்டை தேவைப்படும், இருப்பினும் குழந்தைகளுக்கான கட்டணம் விலக்களிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் Donald Trump கனடாவுக்கு எதிராக மேற்கொண்ட வர்த்தகப் போர் காரணமாக, 2025 ஆம் ஆண்டில் கனடாவில் Nexus விண்ணப்பங்களின் எண்ணிக்கை சுமார் 50 சதவீதம் சரிந்தது. 2024 ஆம் ஆண்டில் 6,95,533 கனேடியர்கள் உறுப்புரிமைக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், 2025 இல் அந்த எண்ணிக்கை 3,44,257 ஆகக் குறைந்தது.
