புதிய லிபரல் தலைவராக Mark Carney தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், 85.9 சதவீத வாக்குகளைப் பெற்று முதல் சுற்றிலேயே அவர் வெற்றி பெற்றுள்ளார். அதனடிப்படையில் Carney கனடாவின் அடுத்த 24 வது பிரதமராக பொறுப்பேற்க்கவுள்ளார்.
வெற்றியை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி Donald Trump மற்றும் கனடாவின் கன்சர்வேடிவ் தலைவர் Pierre Poilievre ஆகியோரை வலிமையுடன் எதிர்கொள்ள உறுதிமொழி எடுத்து ஒரு உரையையும் நிகழ்த்தினார்.
151,899 கட்சி விசுவாசிகள் வாக்களித்தனர். அவர்களில்- 131,674 பேர் Carney க்கு வாக்களித்துள்ளனர். கனடாவின் புதிய அச்சுறுத்தல்கள் புதிய யோசனைகளையும், ஒரு புதிய திட்டத்தையும் கோருகின்றன என்பதை கனேடியர்கள் நன்கு அறிந்துள்ளனர் என தனது உரையில் மேலும் தெரிவித்தார்.
அமெரிக்கர்கள் எங்களுக்கு மரியாதை காட்டும் வரை கனடாவின் வரிகளை வைத்திருப்பதாக Carney உறுதியாக கூறினார். கனடாவை பிரித்து வெற்றிபெறும் தனது திட்டத்தால் நம்மை பலவீனப்படுத்த முடியும் என்று Trump நினைக்கிறார். அதற்கு Poilievre துணை நிற்பதாக Carney குற்றம் சுமத்தினார்.
தற்போதுவரையில் Carney ஓர் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லை எனவே எதிர் காலத்தில் தேர்தலில் போட்டியிடுவதை உறுதிப்படுத்திய அவர் எந்த தொகுதியில் போட்டியிடுகின்றார் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
ஒற்றுமையான கனடா என்பதை வலியுறுத்திய Carney லிபரல் கட்சியின் அதிகாரபூர்வ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கனடாவின் பிரதமராக உத்தியோகபூர்வமாக இன்னும் கடமைகளை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அது தொடர்பான அறிவிப்புக்களை தற்போதைய பிரதமர் Justin Trudeau வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.