இறக்குமதிகள் அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியை பாதிப்பதாக கூறும் Trump வரவுசெலவுத்திட்டத்தின் நிதிப்பற்றாக்குறையை குறைப்பதற்கும், தொழிலாளர்களுக்கு புதிய வேலைகளை உருவாக்குவதற்கும், அமெரிக்கா மீண்டும் பணக்காரராக மாறுவதற்கும் இறக்குமதி வரிகள் அவசியமானவை என்று வலியுறுத்தியுள்ளார்.
அதனடிப்படையில் கனடா மற்றும் மெக்சிக்கோ மீதான இடைநிறுத்தப்பட்டிருந்த வரிகள் அடுத்த மாதம் தொடங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தெரிவித்துள்ளார். இதன்படி கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்களுக்கு 25% வரியும், கனேடிய எண்ணெய் மற்றும் மின்சாரம் போன்ற எரிசக்தி பொருட்களுக்கு 10% குறைந்த வரி விதிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். இது கனடாவின் பொருளாதார வளர்ச்சியையும், பணவீக்கத்தையும் மோசமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் ஜனாதிபதியுடன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் மத்தியில் Trump தாம் சரியான நேரத்தில் வரிகளை அமுல்படுத்தி வருவதாகவும் அது மிக வேகமாக முன்னேறி வருவதாகவும் தெரிவித்துள்ளார். அங்கு கருத்து வெளியிட்ட பிரெஞ்சு ஜனாதிபதி Macron அமெரிக்காவும் ஐரோப்பாவும் பொருளாதாரத்தில் முன்னேற சுமூகமான வர்த்தகம் மற்றும் அதிக முதலீடுகளைக் கொண்ட ஒரு நியாயமான போட்டியை நோக்கி நகரவேண்டும் என்றார்.
சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் நோக்கிலேயே Trump கனடா, மெக்சிக்கோ போன்ற நாடுகள் மீது வரியை விதிக்கின்றார். அதற்கமைய குறித்த நாடுகள் அமெரிக்க ஜனாதிபதியை திருப்திப்படுத்த பல எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.