Pennsylvania இல் முன்னாள் ஜனாதிபதி Donald Trump இன் பேரணியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதையடுத்து, கனேடிய அரசியல்வாதிகள் தாக்குதலைக் கண்டித்துள்ள நிலையில், பிரதமர் Justin Trudeau துப்பாக்கி சூட்டு சம்பவம் குறித்து வேதனை அடைந்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் கொலை முயற்சியாக இருக்கலாம் என விசாரிக்கப்பட்டு வருவதாகக அமெரிக்க சட்ட அமலாக்க அதிகாரிகள் கூறுகின்றனர். இத் துப்பாக்கிச் சூட்டின் போது Trump இன் வலது காதின் மேல் பகுதியில் தோட்டா ஒன்று துளைத்ததைத் தொடர்ந்து முகத்தில் இரத்தத்துடன் இருந்த Trump ரகசிய சேவை முகவர்களால் மேடையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இறந்துவிட்டதாகவும், ஒரு பங்கேற்பாளர் கொல்லப்பட்டதுடன் இரண்டு பார்வையாளர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
அடுத்த வாரம் நடைபெறவுள்ள அவரது கட்சியின் மாநாட்டில் குடியரசுக் கட்சி வேட்பாளராக Trump அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ள நிலையில் இத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. November இல் ஜனாதிபதித் தேர்தலுக்கு சில மாதங்கள் இருக்கின்ற நிலையில் இச் சம்பவம் பதற்றத்தை அதிகரித்துள்ளது.