சட்டமூலம் 104: இன அழிப்பு அறிவூட்டல் வார சட்டத்திற்கு எதிரான மேல்முறையீட்டை கனடா உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தமிழ் இனப்படுகொலை மறுப்பாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை கனடா உச்ச நீதிமன்றம் நிராகரித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இது கனடாவிலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும், மேலும் எதிர்கால சந்ததியின் கல்விக்கான முக்கிய படியாகும் என்றும் Ontario மாகாண இணை அமைச்சர் Vijay Thanigasalam குறிப்பிட்டுள்ளார்.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் May 12 தொடக்கம் 18 வரை Ontario வில் தமிழ் இன அழிப்பு தொடர்பான அறிவூட்டல் வாரமாக அங்கீகரிக்கப்பட்டு பாடசாலைகள், கல்வியியலாளர்கள், தமிழ் சமூகம் மற்றும் அனைத்து Ontario வாழ் மக்களுக்கும் தமிழ் இன அழிப்பு பற்றி கற்றுக்கொள்ள இச்சட்டம் வழியமைக்கின்றது.
இதற்கு உறுதுணையாக Ontario மாகாண முதல்வர் Doug Ford மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், 60 இற்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள், சமூக உறுப்பினர்கள் மற்றும் குறிப்பாக தமிழ் இளைஞர்களின் அயராத முயற்சிகள் ஆகியவை அமைந்தன. இதனால் சட்டமூலம் 104 ஐ பாதுகாக்க முடிந்ததுடன் தமது உறவுகளை இழந்த
சொந்தங்களுக்கு ஓர் ஆறுதலையும் நம்பிக்கையையும் கொடுத்துள்ளது.
இது தொடர்பில் மேலும் கருத்துரைத்த மாகாண இணை அமைச்சர் Vijay Thanigasalam ஒவ்வொரு தமிழ் சமூகமும் கனேடிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை முன்னுதாரணமாகக் கொண்டு
தாம் வாழும் பகுதிகளில் தமிழ் மக்களுக்கு நடந்தது இன அழிப்பே என்பதை வெளிக்கொண்டுவர இவ்வாறான முயற்சிகளை செய்ய வேண்டும் எனவும் அதன் மூலம் எமது பிரச்சினையை ஏனைய சமூகத்தினருக்கும், முழு உலகத்திற்கும் வெளிப்படுத்தலாம் என்று கேட்டுக்கொண்டார்.