மான்ட்ரியல் பகுதியில் உள்ள யூத சபை கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் மாதம் 7ஆம் திகதி இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து கனடாவின் மான்ட்ரியல் பகுதியில் இஸ்லாம் மற்றும் யூதர்களுக்கு எதிராக 324 வெறுப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக பதிவாகியுள்ளன.
இதுதொடர்பாக மேலும் 118 விசாரணைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மான்ட்ரியல் பகுதியில் உள்ள யூத சபை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Molotov Cocktail எனும் பெட்ரோல் நிரம்பிய தீ வைக்கப்பட்ட போத்தல்கள் வீசப்பட்டுள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். மேலும் மான்ட்ரியல் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திங்கட்கிழமை அதிகாலையில் யூத சமூக சபையின் கட்டிடத்தின் நுழைவாயிலில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘நேற்று மான்ட்ரியல் யூத சமூக சபை கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்த தொடர்ச்சியான யூத எதிர்ப்பு வன்முறை செயல்கள் வருந்தத்தக்கவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. உடனடியாக இது நிறுத்தப்பட வேண்டும். இதுபோன்ற கீழ்த்தரமான, வெறுக்கத்தக்க செயல்களுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.